நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம்

0
581

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடி வமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல்(synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை.

நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டுஅழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. நடனங்கள் எல்லோரும் பங்குகொண்டு ஆடுபவையாக, சமூக நடனங்களாக அல்லது பார்வையாளருக்கு நிகழ்த்திக் காட்டுவனவாக இருக்கலாம். சில வேளைகளில் சடங்குகள் தொடர்பிலும், போட்டியாகவும்பாலுணர்வுத் தூண்டலுக்காகவும் கூட நடனங்கள் ஆடப்படுவது உண்டு. நடன அசைவுகளில் எவ்வித பொருட்பொதிவும் இல்லாமல் இருக்கக்கூடும். சில மேற்கத்திய நாட்டார் நடன அசைவுகளும், பலே போன்ற நடனங்களில் உள்ள அசைவுகளும் இத்தகையவை. ஆனால், பல்வேறு இந்திய நடனங்களிலும், வேறு பல கீழைத்தேச நடனங்களிலும் அசைவுகள் பொருள் பொதிந்தவையாகவும், குறியீட்டுத் தன்மைகளுடன் கூடியவையாகவும் காணப்படுகின்றன. நடனங்களில் எண்ணங்களும் உணர்வுகளும் பொதிந்திருக்கலாம் அல்லது நடனங்களில் அவை வெளிப்படலாம். அத்துடன், பலவகை நடனங்கள் கதைகூறும் பாங்கிலும் அமைவது உண்டு.

நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். நடனங்களை உருவாக்கும் கலை நடன அமைப்பு எனப்படுகிறது.

LEAVE A REPLY