நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும் பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டது. திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் பிரியதர்ஷினி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும் ஒரு மணி நேரம் காத்திருக்கவும் தன் காதலன் பார்த்திபன் வருவதாக கூறியதால் திருமணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை எழுந்து சென்றவுடன் விழாக்கோலம் கொண்டு திருமணம் சோகத்தில் நின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிரியதர்ஷினி குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக ஊடங்களில் பரப்பப்பட்ட நிலையில், மணப்பெண் பிரியதர்ஷினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் , அந்த ஆடியோவில் படுகர் மொழியில் பேசிய பிரியா கூறியதாவது . தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஆனந்த் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததால் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவருடன் செல்வதாகவும் கூறி திருமணத்தை நிறுத்தியதாக கூறிய பிரியா, தற்போது நான் எனது பெற்றோர்களுடன் இருப்பதாகவும் என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ பெரிதுபடுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆடியோவின் போது பெற்றோருடன் இருப்பது போன்ற படத்தையும் பிரியா வெளியிட்டுள்ளார். ஆனால் இது பிரியதர்ஷினி தான் வெளியிட்டாரா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து பெண் வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.